Breaking

Saturday, December 7, 2019

திருக்கார்த்திகை தீபம் வரலாறு

திருக்கார்த்திகை வரலாறு:



   ஒருமுறை  படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும்   நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். இருவருக்கும் இடையே சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார்.   பிரம்மனும் விஷ்ணுவும்  தங்களது சண்டையை நிறுத்திவிட்டு  கோடி சூரிய பிரகாசத்துடன் திகழ்ந்த அந்த சோதிப்பிழம்பான நெருப்புத் தூணை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அப்போது சிவப்பெருமான் நான்   ஒளி உருவில் உயர்ந்து நிற்கிறேன். உங்களில் ஒருவர் என் திருவடியையும் மற்றொருவர் என் திருமுடியையும் காண்பதற்கு முயற்சியுங்கள். அதன் பிறகு, உங்களது விவாதத்துக்கு முடிவு சொல்கிறேன் என்றார் சிவபெருமான்.
இதையடுத்து, வலிமையான கொம்புகள் கொண்ட வராகமாக உருவெடுத்தார் திருமால். பூமியை அகழ்ந்து பாதாளத்துக்கும் கீழே சென்று, ஈசனின் பாதமலரைக் காண முற்பட்டார். பிரம்மனோ, அன்னப் பறவையாகி சிறகுகளை விரித்துப் பறக்கத் துவங்கினார் ஈசனின் திருமுடியைக் காண.ஆண்டுகள் பல கடந்தன. இருவரும் களைப்புற்றனர். திருவடியைக் காண முடியாமல் திரும்பினார் திருமால். ஆனால், தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தார் பிரம்மன். அந்த வேளையில், தாழம்பூ ஒன்று வேகமாக கீழ் நோக்கி வருவதைக் கண்டார். அதனிடம் எங்கிருந்து வருகிறாய் எனக் கேட்டார்.

சிவபெருமானின் திருமுடியில் இருந்து விழுந்து.  பல ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறேன். அவரின் திருமுடியைக் காண்பது, உங்களால் இயலாத காரியம் என்றது தாழம்பூ. உடனே பிரம்மன், எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். ஒளிப் பிழம்பின் திருமுடியைக் கண்ட தாகவும், அங்கிருந்து உன்னை எடுத்து வந்ததாகவும் சொல்வேன். நீ அதை ஆமோதித்தால் போதும் என்றார். தாழம்பூவும் சம்மதித்தது.
தாழம்பூவுடன் பூமிக்குத் திரும்பிய பிரம்மன், தான் திருமுடியைக் கண்டதாகவும் அதற்கு சாட்சியாக திருமுடியிலிருந்து தாழம்பூவை எடுத்து வந்ததாகவும் சிவபெருமானிடம் தெரிவித்தார்.
பிரம்மன் கூறுவது பொய் என்பதை அறிந்த சிவனார் கோபம் கொண்டார். பிரம்மனே பொய்யுரைத்த உனக்கு, கோயில்களும் பூஜைகளும் இல்லாமல் போகட்டும். தாழம்பூ, இனி எந்த பூஜைக்கும் பயன்படாது என்று சபித்தார்.
தவறு உணர்ந்த பிரம்மனும் தாழம்பூவும் தங்களை மன்னிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினர். இதன் பலனால். சிவ பூஜை தவிர, மற்ற பூஜைகளுக்கு தாழம்பூ பயன்படும் என்று அருளினார் சிவனார். இப்படி பிரம்மன், திருமால் இருவரது அகந்தையையும் போக்கினார் சிவபெருமான். 

பிரம்மனும்,விஷ்ணுவும் 
சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று திருவண்ணாமலையில்
 காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே திருக்கார்த்திகை.









    
திருக்கார்த்திகை தீப வழிபாடு:

திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசையாகத் தீபஅலங்காரம் செய்வது வழக்கம். இதனால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி இல்லத்தில் குடி கொள்வாள் என்கிறது சாஸ்திரம். 
தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். 
  27 என்பது மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களை குறிக்கும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. அன்றைய தினம் நெல் பொரியை நைவேத்தியமாகப் படைத்தால் சிவனருள் கிடைக்கும். 


   திருக்கார்த்திகை அன்று வீட்டில் குறைந்த பட்சம் இருபத்தேழு தீபங்கள் ஏற்ற வேண்டும். 

ஆகாசத்திற்கு உரிய இடமான முற்றத்தில் நான்கு விளக்குகளும், சமையல் அறையில் ஒன்றும், நடையில் இரண்டும், பின்கட்டில் நான்கும், திண்ணயில் நான்கும், மாடக் குழியில் இரண்டும், நிலைப்படிக்கு இரண்டும், சுவாமி படங்களுக்குக் கீழே இரண்டும், வெளியே யமதீபம் ஒன்றும், திருக்கோலமிட்ட வாசலில் ஐந்தும் என விளக்குகள் ஏற்றிப் பலன் பெறலாம்.
திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.   

ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்

இரு முகம் ஏற்றினால் – குடும்பம்  சிறக்கும்.

மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.

நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.

ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.


கார்த்திகை விளக்கின் தத்துவம் :

எண்ணெய் கரைகிறது, திரி கருகுகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர் நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம்.இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி... வாழ்வில் வளம் பெறுவோம். 





No comments:

Post a Comment