Breaking

Monday, April 9, 2018

Seethaladevi amman-சீதளாதேவி அம்மன் வரலாறு


      

      
            வரலாறு :       ஒரு சமயம் தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள் தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன் தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால், கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர், தேவர்கள். உடலில், அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன. தேவலோக வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை.  எனவே சிவபெருமானை சரண் அடைந்து தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துயர் துடைக்க, சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் பேரொளி தோன்றியது.
பார்வதியின் அம்சமாக மாறிய அந்த ஒளி சீதளாம்பிகை என்று பெயர் பெற்று, அம்பாளாக வடிவெடுத்தது. இந்த தேவியை வழிபடுவதற்கென சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக்கொடுத்தார் சிவன். "சீதளாஷ்டகம்" எனப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி, அம்பாளை வழிபட்டால், வெப்ப நோய் தீரும் என அருள்பாலித்தார்.
அம்பாளின் சிரசு, முறத்தினாலும், கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன், கழுதை வாகனத்தில் காட்சி தருகிறாள். லலிதா சகஸ்ர நாமத்தில், அம்பாளின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி வணங்கும் போது, "சீதளாயை நமஹ" என்று வருகிறது. கழுதை என்பது அனாயசமாக பெரும் பொதியை சுமக்க வல்லது. மற்றவர்களின் சுமையை தனதாகக் கருதி அதற்காக யார் மனமுவந்து உதவுகிறார்களோ அவர்களை விரும்பி ஏற்கிறாள் அன்னை என்பதை அந்த வாகனமே
 உணர்த்துகிறது.


 இப்பண்டிகை வருடா வருடம் சித்திரை மாதத்தில் கிருஷ்ண பட்ச அஷ்டமி திதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் உபவாசம் இருந்து சீதளாதேவியை வேண்டி நோன்பிருப்பார்கள். இதை பசோடா என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள். அன்று பொதுவாக எந்த வீட்டிலும் சமைப்பதில்லை. ஒரு நாள் முன்பாகவே சமைத்து வைத்த உணவையே சாப்பிடுவார்கள்.  ‘ BASI ‘ என்ற வடமொழி சொல்லுக்கு முந்தைய இரவு உணவு என்று பொருள். அதிலிருந்து வந்ததுதான் பசோடா. அதாவது குளிர்ந்த சூடுல்லாத உணவை சாப்பிடுதல் என்று பொருள்படும்.

ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சகஷூ [ CHAKSHU ] என்ற கிராமம் மற்றும் ராஜஸ்தான் குஜராத் உத்திரபிரதேசம் போன்ற மானிலங்களில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை இது. இதை முன்னிட்டு இந்த மானிலங்களில் சந்தைகள் கூடும். சந்தைகளில் எல்லாவிதமான விவசாய உபகரணங்களும் பெண்களுக்கான வளையல் போன்ற ஆபரணங்களும் விற்பனைக்கு வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் இந்தக் கொண்டாட்டங்களைப் பார்க்கவும் அரிய பொருட்களை சந்தையில் வாங்கவும் குவிகிறார்கள்.

       கோடை துவங்கும் காலம் என்பதால், வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும். 

இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவார்கள். 
ராஜஸ்தானில் சீதளா அஷ்டமியை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுவர். காரணம், அது பாலைவனப்பகுதி என்பதால், வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சீதளாதேவி வழிபாட்டை மேற்கொள்வர். தமிழகத்தில், சீதளாதேவியை, மாரியம்மன் என்கிறோம்.

சீதளாதேவி மாரியம்மன்  என்ற பெயரில், தமிழகத்தில் பல இடங்களில் கோயில்கள்  உள்ளன.

                சித்திரை மாதத்தில் கிருஷ்ண பட்ச அஷ்டமி வரும்     இந்நாளில் சீதளாதேவியையோ, மாரியம்மனையோ வழிபட்டு, நோயற்ற வாழ்வு பெறுவோம்.

No comments:

Post a Comment