Breaking

Sunday, November 19, 2017

LORD AYYAPPAN SWAMY HISTORY-ஐயப்பன் வரலாறு


          முன்னோறு காலத்தில் கரம்பன் என்ற அசுரன் வாழ்ந்து வந்தான்.மகன்  மகிஷாசுரன். மகள் மகிஷி எருமைத்தலையுடன் பிறந்தாள். மகிஷாசுரன் தேவர்களுக்கும், மக்களுக்கும்  துன்பம் செய்தான். இதனால் மகிஷாசுரனை சண்டிகாதேவி வதம் செய்தார்.இதனை  பொறுத்துக்கொள்ள முடியாத மகிஷாசுரனின் சகோதரி மகிஷி பலிவாங்க விந்தியமலைக்கு சென்று தவமிருந்தாள். தன்னை யாராலும் அழிக்க முடியாத வரத்தை கேட்டாள். பிரம்மா மறுக்கவே, ஒரு ஆணுக்கும் மற்றொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால்தான் தனக்கு அழிவு வரவேண்டும் என வேண்டிக்கொண்டாள். அதுவும்
சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.
தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர்.
அந்த தருணத்தில் கேரளாவில் பந்தள மகாராஜா நெடுங்காலமாக  குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார். அதையும், மகிஷி அழிவையும் மனதில் கொண்டு சிவன் விஷ்ணுவை அழைத்து நீங்கள்  பாற்கடலில் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த  பகிர்ந்தளித்த லீலையின் போது நான்  ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால்  அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது என்று கூறி. மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அவ்வாறு சிவபெருமானுக்காக  விஷ்ணு    மோகினியாக மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் பார்வைகள்  ஒன்று சேர்ந்து ஒரு சக்தியாக மாறி  பிறந்தவரே ஐயப்பன். இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) - ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு.
குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும், தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம்உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொரளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.
வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும்தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.
அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள்.ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு வளர்த்தனர்.  பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.
எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். அவனுக்கு ராஜராஜன் என்று பெயர் சூட்டினர். மணிகண்டனின் வருகையால் தான் தனக்கு எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார்.
இதை உணர்ந்த மந்திரியும் அரசியும்  மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது சூழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான்.இது சூழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயப்பனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறினர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.
ஐயப்பன்  அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயப்பனை  அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாது என்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயப்பன் அருள் செய்தார்.
மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயப்பனின்  பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.
மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.
மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.
ஆண்டுதோறும் லட்ச லட்சமாக மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.
          சாமியே சரணம் ஐயப்பா

No comments:

Post a Comment