Breaking

Monday, March 13, 2017

108 lingam in one place-தோஷம் போக்கும் 108 சிவாலயம்

          108 ராமலிங்க சுவாமி  திருக்கோவில் பாபநாசம்   (கீழை ராமேஸ்வரம் )
மூலவர் : ராமலிங்க சுவாமி
தாயார் / அம்மன் : பர்வதவர்த்தினி
பழமை : 500-1000 வருடங்களுக்கு மேலாக இருக்கும்
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் :சூரியதீர்த்தம்
ஊர் பெயர் : பாபநாசம்  (கீழை ராமேஸ்வரம் )
மாவட்டம் :தஞ்சாவூர்
மாநிலம் :தமிழ்நாடு
 
தலசிறப்புகள் : 108 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் பிரமாண்டமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால் இத்தலம் சிறப்பு பெற்று விளங்குகிறது மூலவர் ராமலிங்க சுவாமி.106சிவலிங்கங்கள் பக்தி பரவசமூட்டும் வகையில் மூன்று வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன கோவிலின் தென்புறம் அனுமன் காசியில் இருந்து கொண்டு வந்த அனுமந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாள் நாமம் பர்வதவர்த்தினி. தென்னகத்தில் மிகப்பெரிய (6 அடி உயரம் ) சூரிய பகவான் சிலையும் கோவிலின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ளது
தலபெருமை:
விசேஷ சிவாலயம்:
மேற்கு நோக்கிய கோயில்களில் சக்தி அதிகம் என்பர். எனவே, அங்கு வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள், விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்ததுடன், இங்குள்ள 108 லிங்கங்களும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பு. இங்கு ஒரே இடத்தில் தரிசனம் செய்ய, 108 சிவன் கோயில்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பிரதான சன்னதியில் ராமலிங்க சுவாமி இருக்கிறார். இவருக்கு வலப்புறமுள்ள மண்டபம் போன்ற அமைப்பிலுள்ள சன்னதியில் 3 வரிசையில் 106 லிங்கங்கள் உள்ளன. அனுமந்த லிங்கம் சன்னதி, கோயிலுக்கு வெளியே உள்ளது. பக்தர்கள் இங்கு பிரதான மூலஸ்தானம் தவிர, மற்ற 107 லிங்கங்களுக்கும் தாமே பூ போட்டு வேண்டிக் கொள்ளலாம். பிரதோஷத்தன்று மதியம் 107 லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை நடக்கும்.
கோமாதாவிற்கு பிரதோஷம்: சிவனின் வாகனமான நந்திதான், சுவாமி சன்னதி எதிரில் இருப்பார். ஆனால், இக்கோயிலில் நந்தியும், காமதேனுவும் இருக்கிறது. ராமபிரான், அகத்தியரின் ஆலோசனைப்படி இங்கு காமதேனு செய்தார். அதற்கு அகத்தியரே, பிரதோஷ பூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. தற்போதும், பிரதோஷ வேளையில் அகத்தியர் பூஜை செய்வதாக ஐதீகம். காமதேனு சிலை, கழுத்தில் சலங்கைகள் அணிந்து, சிவனை நேராக பார்த்துக் கொண்டிருக்கும்படி வடிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி சிறப்பு:
ராமலிங்கசுவாமி சன்னதி விமானம் ராமேஸ்வரம் கோயில் அமைப்பிலும், அனுமந்தலிங்க சன்னதி விமானம் காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பிலும் உள்ளது. எனவே, காசி, ராமேஸ்வரம் செல்ல முடியாதோர் இங்கு வழிபடுகின்றனர். சிவராத்திரி விழா இங்கு விசேஷமாக நடக்கும். அன்றிரவு முழுதும் 108 லிங்கங்களுக்கும் ருத்ர மந்திரம் சொல்லி நான்கு கால பூஜை நடக்கும். ராமலிங்க சுவாமிக்கு மட்டும் ருத்ராபிஷேகம் செய்வர். அவ்வேளையில், பக்தர்கள் கோயிலை 108 முறை சுற்றி வருவர். இந்த வைபவம் விசேஷமாக நடக்கும். ஐப்பசி பவுர்ணமியிலும் 108 லிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடக்கும்.
அனுமன், சுக்ரீவன்:
ராமபிரான் பாவம் நீங்கப்பெற்றதால் தலத்திற்கு "பாபநாசம்' என்ற பெயர் ஏற்பட்டது. கீழ்ராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. கோயில் முகப்பில் சூரிய தீர்த்தம் உள்ளது. அறியாமல் செய்த பாவம், பித்ருதோஷம் நீங்க இங்கு சுவாமிக்கு தேன், பால் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். மார்கழி திருவாதிரையன்று நடராஜர் புறப்பாடு உண்டு. கோயில் வளாகத்தில் ராமர், லட்சுணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோர் சிவலிங்க பூஜை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. ராமாயணத்தோடு தொடர்புடைய கோயில் என்பதால், பிரகாரத்தில் ஆஞ்சநேயர், சுக்ரீவர் இருவரும் அருகருகில் வணங்கியபடி நிற்கின்றனர். ராமபிரான், சீதையை மீட்க உதவி செய்தவர் என்பதன் அடிப்படையில் சுக்ரீவரை பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஒரே சன்னதியில் காசி விசாலாட்சி, அன்னபூரணி, மற்றொரு சன்னதியில் அருகருகில் காலபைரவர், சனீஸ்வரர், சூரியபகவானும் உள்ளனர்.
சூரியன், சனி சாபம் நீக்கிய தலம்:
                                    அனுமன் காசியில் இருந்து எடுத்து வந்த சிவலிங்கம் கோவிலின் தென்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வசிஷ்ட முனிவர் இருந்த லிங்கம் ஒன்றை காணவில்லை என்பதை அறிந்து சூரியபகவானிடம் கேட்டார்.
அதற்கு அவர். தான் பார்க்கவில்லை என்று கூறினார். அதை நம்ப மறுத்த முனிவர் சூரியனுக்கு சாபமிட்டார். சாபம் நீங்குவதற்கு சூரியன் கண்டியூரிலுள்ள அரசாப விமோசன பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபட பாதி சாபம் நீங்கப்பெற்றது. பின்னர் ஐயாறப்பர் சுவாமியின் வழிகாட்டுதலால் பாபநாசத்துக்கு வந்து வழிபட சூரிய பகவானின் முழு சாபமும் நீங்கியதாக தலவரலாறு தெரிவிக்கிறது
         சூரியனுக்கு சாபமிட்டு கோபத்துடன் வசிஷ்ட முனிவர் வரும் போது அங்கிருந்த அரசமரத்தில் காக உருவில் இருந்த சனீஸ்வர பகவான் சிரித்தார். முனிவர் அவரிடம் எதற்காக சிரித்தாய்? என்று கேட்க. அதற்கு சனீஸ்வரன் ஒரு குரங்கு லிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்றது என்று கூறினார் இதனால் கோபம் அடைந்த முனிவர். இதுவரை உண்மையைக் கூறாமல் மறைத்த காரணத்தால் சனி பகவானுக்கு சாபம் கொடுத்தார் சனி பகவானும் தன்னுடைய சாபம் தீர கண்டியூர் அரசாப விமோசன பெருமாள் ஆலயத்துக்கு வந்து தரிசித்து பாதி சாபம் நீங்கப்பெற்றார். பின்னர் ஐயாறப்பர் வழிகாட்டுதலின்படி பாபநாசத்துக்கு வந்து வழிபட்டுச். முழு சாபமும் நீங்கியது. ராமபிரானின் உத்தரவுபடி இக்கோவிலின் கீழக்குபகுதியில் சூரியபகவான் அருகே சனீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு :     இதிகாச காப்பியங்களில் ஒன்றான ராமாயணத்துக்கும் பாபநாசத்துக்கும்  நேரடி தொடர்பு உண்டு. இலங்கையில் ராவணனை சம்ஹாரம் செய்த தோஷம் அகல ராமபிரான் ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்து
தீர்த்தத்தில் நீராடி விட்டு மனைவி சீதை,தம்பி லெட்சுமணன்,அனுமன் ஆகியோருடன் அயோத்திக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் மணற்பாங்கான குடமுருட்டி ஆற்றின் அருகே பாபநாசத்துக்கும் வந்தனர். அப்போது தங்களை ஏதோ தோஷம் பின் தொடர்வதை உணர்ந்த சீதை அதை ராமனிடம் கூறினார்.அதை கேட்ட ராமன் ராவணனின் தங்கை சூர்ப்பனகை அரக்கர்கள்  ஹரன் தூஷன் ஆகியோரை சம்ஹாரம் செய்த தோஷமே தங்களை பின்தொடர்ந்து வருகிறது என்று கூறினார் தோஷம் அகல சிவலிங்க பூஜை செய்வது தான் உத்தமம் என்று தீர்மானித்தனர் அங்கே வில்வ மரம் இருந்தது அதன் அருகே குடமுருட்டி ஆறு ஓடுவதைக்கண்டனர்.உடனே சீதை அனுமனை அழைத்து நீ காசிக்கு சென்று விரைவாக சிவலிங்கம் ஒன்றை கொண்டு வருவாயாக என்று கூறினார் காசிக்கு சென்ற அனுமன் திரும்பி வரும் வரை சீதை குடமுருட்டி ஆற்றில் மூழ்கி ஈரமணலை எடுத்து வரிசையாக சிவலிங்கங்களை உருவாக்கினார். ராமன் லெட்சுமணன் ஆகியோர் உதவியுடன் சீதை தனது கரங்களாலேயே 100 க்கும் மேற்பட்ட லிங்கங்களை உருவாக்கினார்.அனுமன் காசியில் இருந்து திரும்பும் முன்னதாகவே பக்தி பரவசத்துடன் வில்வ மரத்தடியில் சிவலிங்க பூஜையை தொடங்கிவிட்டனர்.காசியில் இருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்த அனுமன் அதை வெளிப்பிரகாரத்தில் வைத்து விட்டார். காசியில் இருந்து திரும்பும் முன்பே சிவலிங்க பூஜையை தொடங்கி அது பூர்த்தியடையும் நிலையில் இருப்பதை பார்த்த அனுமன் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய நினைத்து ராம லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுத்தார்.அப்போது வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார்.வால் அறுந்து விழுந்த இடம் இன்று அனுமன் நல்லூர் என்று வழங்கப்படுகிறது.
அனுமன் கோபத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த ராமன் என் பிரியமானவனே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 107 சிவலிங்கங்களை  பக்தர்கள் வழிப்பட்டாலும் 108 -வது சிவலிங்கமான அனுமந்த லிங்கத்தையும் வழிபட்டு பின்னர் அம்பாளை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்.தோஷம் நீங்கப்பெறும் என்றார்.தோஷம் அகல காரணமான இத்தலம் பாபநாசம் என்று அழைக்கப்படும் என்று அருளினார்.ராமபிரானின் தோஷம் நீங்கப்பெற்ற இத்திருத்தலத்துக்கு வந்து இங்குள்ள ராமலிங்கத்தையும் சனி பகவானையும் வழிபட்டால் அனைவரின் தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறலாம் என்று தலபுராணம் கூறுகிறது
     திருவிழாக்கள்:
 
     மகாசிவராத்திரி இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது
   
         அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து மேற்கே 15 கிலோ மீட்டர் தூரத்திலும் தஞ்சையில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது

No comments:

Post a Comment