Breaking

Thursday, May 4, 2017

Agni Natchathiram-அக்னி நட்சத்திரம்

    

             கோடை காலத்தில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும் காலம் அக்கினி நட்சத்திரம், அக்கினி நாள் அல்லது கத்தரி வெயில் என்று அழைக்கப்படும். இது ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப் பஞ்சாங்கப்படி ஞாயிறு (சூரியன்) பரணி விண்மீன் மூன்றாம் பாதத்தில் தொடங்கி கிருத்திகை மீன் முழுவதும் வலம்வரும் காலகட்டமாகும். சூரியன் மேட இராசியில் உலவும் உச்ச வெயில் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படும்
      அக்னி நட்சத்திரம், என்னும் கோடைக் காலத்தின் உச்சம், வரும் சித்திரை 21-ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து 21 நாட்கள் வரை  வெப்பத்தின் அளவு அதிகமாகவே இருக்கும்.
அக்னி தேவன் சூரியனின் கதிர்களில் இருந்து பிறப்பெடுத்தவன்.ஒரு முறை சுவேதகி என்னும் அரசன் தொடர்ந்து 12 ஆண்டுகள் யாகத்தை நடத்தினான். யாகத்தின் போது, தீயில் இட்டுக்கொண்டிருந்த நெய், அக்னி தேவனின் பசியை அதிகரித்துவிட்டது. "கடும் பசியும், தீராத வயிற்று வலியும் தீர வேண்டுமென்றால் அடர்ந்த காட்டை விழுங்கியே ஆக வேண்டும்" என்று வலியால் துடித்த அக்னி தேவனிடம் கூறினார் பிரம்மன்.
   காடுகளைத் தேடி அலைந்த அக்னி தேவன், வழியில் காண்டவ வனத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான். ஆனால், அக்காடுகளை விழுங்குவதற்குத் தடையாக, அடர்மழையைப் பெய்யும்படிச் செய்தான் இந்திரன். அக்னி தேவனால் மழையை எப்படிச் சமாளிக்க முடியும்? வேறு வழியின்றி முதியவர்  வேடம் தரித்து காண்டவ வனத்திற்குச் சென்றார்.அப்போது எதிரே கிருஷ்ணரும், அர்ஜுனனும் நடந்து வருவதைக் கண்டார். பின்பு கிருஷ்ணரிடம் தன் பசிக்கு வழி கேட்கலாம் என்று நினைத்து தனது சுயரூபத்தைக் காட்டினார். கிருஷ்ணரோ அக்னி தேவனின் நிலையையும், இந்திரன் ஏற்படுத்திய தடைகளையும் அறிந்து, அவர் பசி தீர ஒரு வழி சொன்னார்.
"அக்னி தேவனே, உன் பசியைப் போக்க நான் ஒரு வழி சொல்வேன். ஆனால் ஒரு நிபந்தனை, 21 நாட்களுக்கு மேல் உன் உஷ்ணத்தைப் பூமியில் அதிக அளவு செலுத்தக்கூடாது "என்று வரையறுத்தார். அக்னி தேவனும் சம்மதிக்க, அர்ஜுனனிடம் தன் அம்புகளால் கூடாரம் அமைக்கக் கட்டளையிட்டார்.
  கிருஷ்ணா  இப்போது என்னிடம் வில் மற்றும் அம்புகள் இல்லையே" என்று அர்ஜுனன் கூறினான். உடனே அக்னி தேவன், பிரம்மன் தனக்கு அருளிய வில்லான காண்டீபத்தை அளித்தார்.(மகாபாரதப் போரில், இந்தக் காண்டீபத்தால்தான் அர்ஜுனன் எதிரிகளை வீழ்த்தினார்..)
அர்ஜுனன் காண்டீபத்தால், ஆயிரக்கணக்கான அம்புகளைக் கொண்டு, அக்னி தேவனுக்கு ஒரு கூடாரத்தை அமைத்தார். கிருஷ்ணனின் துணையுடன் அந்தக் கூடாரத்தில் இருந்த அக்னி தேவன் தன் பெரிய நாக்குகளை நீட்டி காடுகளில் இருந்த உணவுகளைச் சாப்பிட்டார். இந்திரன், இதைத் தடுக்க, மழை பொழிய வைத்தாலும்,  ஒரு சொட்டு மழை நீர் கூட உள்ளே செல்லாமல் அர்ஜுனனின் அம்பு கூடாரம் தடுத்தது. 21 நாட்கள் முடிந்ததும், அக்னி தேவனின் பசியும் தணிந்தது, வெப்பமும் குறைந்தது. இதுவே அக்னி நட்சத்திரத்தின் கதையாகும்.





No comments:

Post a Comment